செய்திகள்
கைதான விவசாயி

வாலிபர் கொலை: கொலை மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டினேன் - கைதான விவசாயி வாக்குமூலம்

Published On 2019-12-07 11:13 GMT   |   Update On 2019-12-07 11:17 GMT
கல்வராயன்மலையில் கொலை மிரட்டல் விடுத்ததால் வாலிபரை கொலை செய்தேன் என கைதான விவசாயி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கச்சிராயப்பாளையம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள மலையரசன்பட்டு கிராமத்தைசேர்ந்த மதியழகன் (வயது26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (55) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மலையரசன்பட்டில் உள்ள சித்தனாகாட்டு கோட் டாய் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மதியழகனை சிலர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்து அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மதியழகனின் தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம், அவரது மகன் ராமேஷ்வரன், மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் காட்டு ராஜா, ரஞ்சிதா, சகாதேவன், தீர்த்தன் ஆகிய 7 பேர் மீது கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மாணிக்கத்தை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் மாணிக்கம் கூறியதாவது:-

எனக்கும் மதியழகனுக் கும் இடையே நிலபிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்றும் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதியழகன் என்னை சரமாரியாக தாக்கினார். மீன்டும் என்னிடம் பிரச்சினைக்கு வந்தால் கொலை செய்துவிடுவ தாகவும் மிரட்டினார்.

மதியழகன் என்னை கொலை செய்வதற்கு முன் நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று இரவு மோட்டார்சைக்கிளில் வந்த மதியழகனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தேன். அதிலும் ஆத்திரம் தீராததால் மதியழகனின் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதியழகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணிக்கத்தின் வாக்குமூலத்தில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மதியழகனை, மாணிக்கம் தனியாக கொலை செய்திருக்க முடியாது என்பதால் அவரிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மாணிக்கத்தின் மகன் ராமேஷ்வரன், மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் காட்டு ராஜா, ரஞ்சிதா, சகாதேவன், தீர்த்தன் ஆகிய 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News