செய்திகள்
மழையில் நனைந்த படி செல்லும் மாணவிகள்.

அதிகாலை முதல் சென்னையில் மீண்டும் மழை

Published On 2019-12-07 06:10 GMT   |   Update On 2019-12-07 06:10 GMT
கடந்த 3 நாட்கள் மழை இல்லாத நிலையில் மீண்டும் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு தென் மாவட்டங்களில் இயல்பு அளவை விட அதிக மழை பெய்துள்ளது.

பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஏரிகள், குளங்கள், கால்வாய் என அனைத்தும் நிரம்பி உள்ளன. தென் மாவட்டங்களில் அதிக மழை கிடைத்துள்ள நிலையில், வட மாவட்டங்களில் மழை குறைவாக பெய்துள்ளது.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வழக்கமாக பெய்ய வேண்டிய அளவை விட மழை சற்று குறைவாக பெய்துள்ளது.

சென்னைக்கு இன்னும் 10 செ.மீ. மழை கிடைக்க வேண்டும். மழைக்காலம் முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் சென்னை நகரின் மழை பற்றாக்குறை நிவர்த்தியாகுமா என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மீண்டும் மழை பெய்தது. இரவில் லேசான தூரல் இருந்தது. அதிகாலையில் நகரின் பல இடங்களில் மழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அண்ணாநகர், அமைந்தகரை, கோயம்பேடு, கோடம்பாக்கம், பெரம்பூர், மூலக்கடை, கொடுங்கையூர், மயிலாப்பூர், அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.

அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை பின்னர் விட்டு விட்டு பெய்தது. அதே போல புறநகர் பகுதியிலும் மழை பெய்தது. செங்குன்றம், புழல், சோழவரம், பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், ஆவடி, அம்பத்தூர் பகுதியிலும் லேசான மழை பெய்தது.

கடந்த 3 நாட்கள் மழை இல்லாத நிலையில் மீண்டும் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News