செய்திகள்
மூதாட்டி முனியம்மாளிடம் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. தெய்வநாயகி விசாரணை நடத்திய காட்சி.

மகனிடம் இருந்து சொத்தை பிடுங்கி மூதாட்டியிடம் ஒப்படைத்த அதிகாரி

Published On 2019-12-07 04:29 GMT   |   Update On 2019-12-07 04:59 GMT
போச்சம்பள்ளி அருகே அனாதையாக விட்டதால் மகனிடம் இருந்து சொத்து பிடுங்கி மூதாட்டியிடம் ஒப்படைத்த அதிகாரியை அனைவரும் பாராட்டினார்கள்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 76). இவரது மகன் முருகன். மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

முருகனின் மனைவி சக்தி ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

முனியம்மாளுக்கு 7ஏக்கர் நிலமும், ஒரு வீடும் இருந்தது. முனியம்மாளின் கணவர் சின்னசாமி உயிரோடு இருந்தபோது பெற்றோர் இருவரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்து நிலத்தையும், வீட்டையும் தனது பெயருக்கு முருகன் மாற்றிக் கொண்டார்.

கடந்த 2003-ம் ஆண்டு சின்னசாமி இறந்துவிட்டார். அதன்பிறகு முனியம்மாளை வீட்டைவிட்டு முருகன் துரத்தி விட்டார். அந்த வீட்டில் தனது மனைவியின் உறவினர்களை குடி வைத்தார்.

இதனால் முனியம்மாள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசை அமைத்து கடந்த 16 ஆண்டுகளாக வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். தற்போது நடக்க முடியாததால் பிச்சை எடுக்கவும் முடியவில்லை. இதனால் பசிகொடுமையால் வாடினார். அவருக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை.

நேற்று முன்தினம் தனது மகனிடம் இருந்து ஜீவனாம்சம் வாங்கி தருமாறு கூறி போச்சம்பள்ளி தாசில்தாரிடம் மனு கொடுத்தார். அதன்பிறகு அங்கேயே அவர் மயங்கி விழுந்தார். உடனே தாசில்தார் அலுவலக ஊழியர்கள் அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து செலவுக்கு பணமும் கொடுத்தனர். பின்னர் முனியம்மாள் கொடுத்த மனுவை தாசில்தார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.டி.ஓ.வுக்கு அனுப்பி வைத்தார்.

ஆர்.டி.ஓ. தெய்வநாயகி கிராமத்திற்கு நேரில் வந்து முனியம்மாள் மற்றும் அவரது மகன் முருகன், மருமகள் சக்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கிராம மக்களிடமும் தகவல்களை கேட்டு அறிந்தார். பசி கொடுமையில் இருந்த முனியம்மாளுக்கு ஆர்.டி.ஓ. தனது சொந்த செலவில் சாப்பாடும் வாங்கி கொடுத்தார்.

அதன்பிறகு மூத்தோர் குடிமக்கள் சட்டத்தின் கீழ் தானபத்திரம் செய்த நிலத்தில் 3 ஏக்கர் நிலத்தை மட்டும் ரத்து செய்து மீண்டும் முனியம்மாளிடம் வழங்க பரிந்துரை செய்தார். மேலும் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரத்தை ஜீவனாம்சமாக முனியம்மாளுக்கு வழங்க அவரது மகன் முருகனுக்கு உத்தரவிட்டார். அதை அவர் ஏற்றுக் கொண்டு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் வழங்க ஒப்புக் கொண்டார்.

இதை கேள்விப்பட்ட முனியம்மாள் ஆர்.டி.ஓ. தெய்வநாயகிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News