செய்திகள்
சந்தோஷ்குமார்- சங்கர்

ஆத்தூர் அருகே விபத்து: கல்லூரி மாணவர்- புகைப்பட கலைஞர் பலி

Published On 2019-12-06 10:31 GMT   |   Update On 2019-12-06 10:31 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லூரி மாணவர், புகைப்பட கலைஞர் ஆகியோர் விபத்தில் சிக்கி பலியாகினர்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சங்கர் (வயது 27). புகைப்பட கலைஞரான இவர், அதே பகுதியில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார்.

இவரும், துலுக்கனூர் இந்திரா நகரைச் சேர்ந்த ராஜா மகன் சந்தோஷ்குமார் (23) என்பவரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க வேண்டி இருந்ததால் சங்கர், தனது நண்பர் சந்தோஷ்குமாரை உதவிக்கு அழைத்துக் கொண்டு நேற்று இரவு காட்டுக்கோட்டையிலிருந்து, மோட்டார்சைக்கிளில் ஆத்தூரை நோக்கி சென்றார்.

அப்போது, ஒதியத் தூரைச் சேர்ந்த கிழங்கு புரோக்கர் ஜெயபிரகாஷ் (39), மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். அம்மம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சமத்துவ புரம் சாலை வளைவில், இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் திடீரென நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது சென்னை- சேலம் நோக்கிச் சென்ற கார், அவர்கள் மீது அதிவேகத்தில் மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இதில் சங்கர் மற்றும் சந்தோஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகிய 3 பேரும் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சில நிமிடங்களில் சங்கர், சந்தோஷ்குமார் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஜெயபிரகாஷூக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலியான சந்தோஷ் குமார் ஆத்தூர் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். உயிரிழந்த 2 பேர் உடல்களையும் பார்த்து ஆத்தூர் அரசு ஆஸ்பத்தியில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த விபத்து குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News