செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 7000 கன அடி நீர் வெளியேறும் காட்சி

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 102 அடியாக அதிகரிப்பு

Published On 2019-12-06 06:27 GMT   |   Update On 2019-12-06 06:27 GMT
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 102 அடியானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நெல்லை:

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மழை நன்றாக வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து குளங்கள், அணைகள் உள்ளிட்டவைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்து வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இந்த இதமான சூழ்நிலையை மக்கள் பெரிதும் ரசித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் இரவு நேரங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இன்றைய நிலவரப்படி அணையில் 142.60 அடி நீர் இருப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.



இன்று காலை அணைக்கு வினாடிக்கு 2,341 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2469 கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 147.28 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. மேலும் பாசனத்திற்கு சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் எதும் இல்லை.

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணையின் மொத்த உயரம் 118 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வந்தது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நேற்று அணையின் நீர்மட்டம் 100.50 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணைக்கு 1,554 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 102 அடியானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் சற்று குறைந்தது. இதையடுத்து பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் குளித்தனர். மேலும் மண்டப பகுதிகளை மூழ்கடித்தபடி சென்ற வெள்ளமானது தற்போது குறைந்து அவை தெரிய ஆரம்பித்துவிட்டது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ராதாபுரம்-19, நம்பியாறு-15, சேர்வலாறு-11, பாபநாசம், கொடுமுடியாறு-10, நாங்குநேரி-7.40 மணிமுத்தாறு-6.6, அம்பை-5.80 சேரன்மகாதேவி-4.40, கடனாநதி-4, பாளை-3.30, நெல்லை, குண்டாறு-2, சிவகிரி-1.


Tags:    

Similar News