செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராக இல்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2019-12-05 14:15 GMT   |   Update On 2019-12-05 14:15 GMT
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராக இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை:

மதுரை விமான நிலையத் தில் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறிய தாவது:-

இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையில் அதிக கடன் கொடுத்தது தமிழக அரசுதான் என்ற அடிப்படையில் மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது அ.தி.மு.க. அரசு 2-வது முறையாக பெற்றுள்ளது.

தி.மு.க.வை பொறுத்த வரையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை. தோழமை கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளை தி.மு.க. போட்டு வருகின்றது.

புதிய மாவட்டங்கள் பிரித்தாலும் அதிலுள்ள பஞ்சாயத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்ற சட்டம் இருந்து வருகிறது. தி.மு.க.வினர் கூறிவரும் வாதங்கள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை என்பதாகத்தான் இருக்கிறது.

தி.மு.க.வை பொறுத்தவரையில் மு.க.ஸ்டாலினை நம்பி அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாது என்ற நிலையில் உள்ளனர்.

கருணாநிதியின் மகன் என்ற அடிப்படையில் தலைமைப் பொறுப்புக்கு வந்ததினால் அவருக்கு எவ்வாறு அரசியல் நடத்துவது, மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது கூட தெரியவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அரசை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்.மு.க.ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மதிப்பு உயர்ந்துள்ளது. மக்கள் மத்தியில் மிகச்சிறந்த முதலமைச்சராக எல்லோரும் பாராட்டி வருகின்றனர். நாள்தோறும் புதிய புதிய திட்டங்களை தருகிறார். எனவே மக்கள் அனைவரும் இன்றைக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

தி.மு.க.வை வெளியில் இருந்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால் வைகோ அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் நினைத்ததை சாதித்து வருகிறார்.

ஆளுமை திறன் அதிகம் மிக்க அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பார் என்றால் அவர் வைகோ தான்.

எனவே அவருடைய அரசியல் தலைமைக்கு வாழ்த்து கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News