செய்திகள்
சுரேஷ்

திருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு

Published On 2019-12-04 09:25 GMT   |   Update On 2019-12-04 09:25 GMT
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி:

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் முருகன், சுரேஷ், மதுரை கணேசன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 28 கிலோ நகைகளில் 25 கிலோ நகைகளை 3 பேரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில் மீதமுள்ள நகைகளை மீட்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 3பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். முருகனின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இந்தநிலையில் கடந்த 2017ம் ஆண்டு கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளையில் சுரேசுக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கே.கே.நகர் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சி ஜே.எம்.2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இதற்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். போலீசார் கைவிலங்கு போட்டு அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில்,

நாங்கள் கொள்ளையடித்த நகைகளை விட கூடுதல் நகைகளை போலீசார் எங்களிடம் கேட்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கொள்ளை நகைகளில் சிலவற்றை போலீசார் அபகரித்துள்ளனர். கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் கொடுத்து விட்டோம். இருப்பினும் வேறுநகைகளை கேட்டு போலீசார் எங்களை துன்புறுத்துகின்றனர். திருவாரூர் போலீசில் ஒரு கிலோ நகைகள் வரை உள்ளது. நாங்கள் ஜாமீனில் வெளியே வர முடியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று போலீசார் மீது பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இதற்கு முன்பு சுரேசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போது, தனது குடும்பத்தினரை போலீசார் தொந்தரவு செய்வதாக புகார் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News