செய்திகள்
ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு நடந்த கோவில்.

திருவாரூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு

Published On 2019-12-03 04:26 GMT   |   Update On 2019-12-03 04:26 GMT
திருவாரூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகேயுள்ள தாளக்குடி ஊராட்சி கீரன் கோட்டகம் என்ற இடத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்களின் நிர்வாகத்தில் உள்ள இந்த கோவில் பழுதடைந்ததால் கோவிலை புனரமைக்கும் பணியில் அந்த கிராம மக்கள் ஈடுபட்டனர்.

இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று அம்மன் கோவில் கட்டுமான பணிகளுக்காக சிமெண்ட் மூட்டைகள் வந்துள்ளது. அதனை சிந்தாமணி விநாயகர் கோவில் உட்புறம் வைப்பதற்காக கோவிலை திறந்து உள்ளே சென்று உள்ளனர். அப்போது கோவிலின் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த அம்மன் சிலை காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராம மக்கள் இதுகுறித்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காணாமல் போன அம்மன் சிலை 1½ அடி உயரம் இருக்கும் என்றும் அந்த சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது என்றும் சிலையின் மதிப்பு ரூ. 1 கோடி என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கொரடாச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அம்மன் சிலை விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டிருப்பதை தெரிந்த நபர்கள் யாரோ அதை திருடி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News