ஆரணி அருகே போலீஸ் மீது லஞ்சபுகார் கொடுத்த வாலிபர் எந்த அடிப்படையில் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்த தகவல்களின் நகல்களை வழங்க வேண்டும் என தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆரணி அருகே உள்ள களம்பூரை சேர்ந்தவர் லட்சுமணன் (40). நிலத்தரகர். இவர் மணல் கடத்தல் குறித்து மனுக்கள் அளித்து வருகிறார்.
தகவல் ஆணையர் தட்சிணாமூர்த்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது லட்சுமணன் மனு குறித்து விசாரணை நடத்தினார். லட்சுமணன் எந்த அடிப்படையில் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்த தகவல்களின் நகல்களை வழங்க வேண்டும். மேலும் தகவல் ஆணையத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக லட்சுமணன் கூறியதாவது:-
நான் கடந்த 2015-ம் ஆண்டு களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணல் கடத்தலுக்கு லஞ்சம் வாங்குவதாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து என்னை ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளனர். என்மீது 3 வழக்கு உள்ளதாக தெரிவித்தனர். அதில் 2 வழக்கு என் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.