செய்திகள்
மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடப்பதை காணலாம்

தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு - 2 நாட்களுக்கு மலைரெயில் ரத்து

Published On 2019-12-02 03:54 GMT   |   Update On 2019-12-02 03:54 GMT
மேட்டுப்பாளையம்- ஊட்டி தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 2 நாட்களுக்கு மலைரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15-ந் தேதி இரவு நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 23 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக மலைரெயில் போக்குவரத்து கடந்த மாதம் 16-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் பாதையில் அடர்லி- ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. அப்போது மதியம் 2 மணியளவில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வந்த மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் மலை ரெயிலில் சென்ற சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். அவர்கள் பஸ் மூலம் அனுப்பி வைக்கப் பட்டனர்.

இந்தநிலையில் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் போக்குவரத்து 2 நாட்கள் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் (செவ்வாய்கிழமை) ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர்தான் மீண்டும் மலைரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

Similar News