செய்திகள்
ஜிகே வாசன்

இலங்கை அதிபரிடம் தமிழர்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க பிரதமர் மோடி வற்புறுத்த வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2019-11-29 07:16 GMT   |   Update On 2019-11-29 07:16 GMT
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபரிடம் தமிழர்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க பிரதமர் மோடி வற்புறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள இலங்கை அதிபரிடம் இந்திய பிரதமர் இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு உரிய உரிமைகள், பாதுகாப்புகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் பாகுபாடில்லாமல், தடையில்லாமல் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற வேண்டும்.

இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் இந்திய பிரதமர் இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு உள்ளது போல தமிழர்களுக்கும் மற்ற சிறுபான்மை மக்களுக்கும் ஒரே மாதிரியான சலுகைகள், உரிமைகள், பாதுகாப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கூற வேண்டும்.

இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டுமல்ல சகோதரத்துவத்துடன் பழகும் நாடுகள். எனவே இந்திய பிரதமர் இலங்கை அதிபரிடம் பேசும் போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் வாழும் சில பகுதியில் உள்ள ராணுவத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வலியுறுத்த வேண்டும்.

சிங்களர்களும் தமிழர்களும் மற்ற சிறுபான்மை மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இலங்கை அரசு இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை வகுத்து திட்டங்களின் பயன் அனைவருக்கும் சமமாக சென்றடைய வேண்டும். ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்யும் போது பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மீனவர்களிடையே ஒத்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை பிரதமர் இலங்கை அதிபரிடம் வைத்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும்.

இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கின்ற சிங்களர்களும் சிறுபான்மையாக இருக்கின்ற தமிழர்கள் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினரும் ஒற்றுமையாக ஏற்றத்தாழ்வில்லாமல் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. எனவே, இந்திய பிரதமர் இலங்கை அதிபரிடம் இலங்கை வாழ் தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக உறுதியோடு பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News