செய்திகள்
பாபநாசம் அணை

நெல்லை மாவட்டத்தின் பிரதானமான பாபநாசம் அணை நிரம்பியது

Published On 2019-11-27 10:00 GMT   |   Update On 2019-11-28 02:37 GMT
143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை இன்று பிற்பகல் நிரம்பியது. அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1396 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. குற்றால அருவிகள் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

திருச்செந்தூரில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலையில் அணைகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 141 அடியாக இருந்தது. இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 142.35 அடியாக உள்ளது. அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,946 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

எனவே, மொத்தம் 143 அடி உயரம் கொண்ட இந்த அணை இன்று பிற்பகல் நிரம்பியது. இதனால் அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1396 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. தாமிரபரணி நதியின் பிரதான அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையும் கடந்து ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை நிரம்பி வினாடிக்கு 104 கன அடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.

இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.52 அடியாக உயர்ந்து உள்ளது. இந்த அணையும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.

இதுதவிர மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று இந்த அணையின் நீர்மட்டம் 75.75 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு வினாடிக்கு 1467 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்கு 35 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட இன்று காலை 77.70 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார், குண்டாறு, கருப்பாநதி ஆகியவை நிரம்பி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது கடையம் பகுதி பிசான சாகுபடிக்காக, ராமநதி, கடனாநதி ஆகிய 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று 2 அணைகளில் இருந்தும் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடனா நதி அணையில் இருந்து நேற்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி வரை 125 நாட்களுக்கு வினாடிக்கு 125 கனஅடி வீதம், மொத்தம் ஆயிரத்து 653.87 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் இருப்பை பொறுத்து, தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
 
இதன் மூலம் கடனாநதி அணை பாசனத்திட்டத்தின் கீழுள்ள அரசபத்துகால், வட குருவ பத்துகால், ஆழ்வார் குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால் மற்றும் காங்கேயன் கால் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் 9 ஆயிரத்து 923.22 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோன்று ராமநதி அணையில் இருந்து நேற்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் 29-ந் தேதி வரை 125 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம், மொத்தம் 823.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ராமநதி அணை பாசன திட்டத்தின் கீழுள்ள வடகால், தென்கால், புதுக்கால் மற்றும் பாப்பான்கால் ஆகியவற்றின் கீழ் பாசன வசதி பெறும் 4 ஆயிரத்து 943.51 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
Tags:    

Similar News