செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி - மத்திய அரசு ஒப்புதல்

Published On 2019-11-27 09:02 GMT   |   Update On 2019-11-27 09:02 GMT
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து இதற்கான தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
சென்னை:

நாடு முழுவதும் 2021-ம் ஆண்டிற்குள் 72 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்அடிப்படையில் தமிழகத்தில் ஏற்கனவே 4 அரசு மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு 60 சதவீத பங்களிப்பும், மாநில அரசு 40 சதவீத பங்களிப்புடன் இந்த புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மேலும் 3 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு தமிழக அரசு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கடிதம் கொடுத்து இருந்தது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதன் மூலம் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி விதம் தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைய வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசு தொழில் நுட்ப குழு கூட்டத்தில் வலியுறுத்தியது. அதனை ஏற்று அக்குழு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்தது.



இந்தநிலையில் புதிய 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரிகளுக்கு  தலா ரூ.325 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
Tags:    

Similar News