செய்திகள்
கவுதமன்

ரஜினி-கமல் அரசியலில் சேருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்: இயக்குனர் கவுதமன்

Published On 2019-11-24 09:14 GMT   |   Update On 2019-11-24 09:14 GMT
ரஜினி-கமல் அரசியலில் சேருவதாக கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கிருஷ்ணகிரியில் இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி:

தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளரும், சினிமா இயக்குனருமான கவுதமன் கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் சாமானிய மக்களுக்காக நடத்தப்படும் தேர்தல் ஆகும். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என கூறினார்கள்.

ஆனால் தற்போது தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மேயர், தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்றும், தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடக்கும் என அறிவித்துள்ளார்கள்.

யாரை திருப்தி செய்வதற்காக இது போன்று அறிவிக்கிறார்கள். கூட்டணி கட்சிகளை மேயர், தலைவர் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்த இது போன்று செய்கிறார்கள். சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை மக்களுக்கு செய்து தர வேண்டியது உள்ளாட்சி அமைப்புகள் தான். தற்போது தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்.

ரஜினி-கமல் ஆகியோர் கூட்டணி வைப்பதாக கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயல். மக்களை அழிக்க வந்த கூட்டத்திற்கு இவர்கள் துணையாக இருப்பார்கள். உங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.

33 ஆண்டுகளுக்கு முன்பே சேர்ந்து நடித்தால் சொத்து, புகழ் சம்பாதிக்க முடியாது என்று பிரிந்தவர்கள் ரஜினி - கமல். இன்று அரசியலில் சேருவதாக கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுகிறது. தமிழக அரசு தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற தவறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News