செய்திகள்
ராமதாஸ்

மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2019-11-23 07:13 GMT   |   Update On 2019-11-23 07:13 GMT
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணங்களை மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு தான் நிர்ணயித்து வந்தது. தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 35 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சமும், நிர்வாக இடங்களுக்கு ரூ.12 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது ஒப்பீட்டளவில் மிகக் குறைவான கட்டணமாகும்.

ஆனால், 50 சதவீத இடங்களுக்கு இந்திய மருத்துவக் குழு, தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. அதேபோல், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே விருப்பம் போல கட்டணம் நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதால், அத்தகைய இடங்களுக்கு தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு இணையாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படலாம். இதுவும் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவர்.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 3 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.11.50 லட்சமும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்திருக்கும் கட்டணம் சராசரியாக ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஆகும்.

கட்டண நிர்ணயத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரிகள், இப்போது இந்திய மருத்துவக் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டதற்கு காரணம் சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் தான்.

மருத்துவக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த சீர்திருத்தம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதுடன் மட்டுமின்றி, ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுகளையும் அடியோடு சிதைத்துள்ளது.

எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News