செய்திகள்
கிணற்றில் இருந்து ஸ்டீபனை தீயணைப்பு வீரர்கள் மீட்ட காட்சி

பேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளி

Published On 2019-11-22 07:48 GMT   |   Update On 2019-11-22 07:48 GMT
புதுக்கடை அருகே பேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

புதுக்கடை அருகே உள்ள ஐரேணிபுரம் அயனிவிளை பகுதியில் நாகதேவி கோவில் ஒன்று உள்ளது.

இன்று காலை இந்த கோவிலுக்கு வழக்கமான பூஜைகள் செய்வதற்காக பூசாரி சென்றார். அப்போது கோவிலின் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் அவர் அங்கு சென்று கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தார்.

அப்போது அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் தண்ணீரில் தவித்தபடி இருந்தது தெரியவந்தது. கிணற்றில் இருந்து தன்னை காப்பாற்றும்படி அவர் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த தகவலை பூசாரி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து பொதுமக்களை அங்கு திரட்டினார். சுமார் 35 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் ஒரு அடி அளவுக்கே தண்ணீர் இருந்தது. அவரை பொதுமக்கள் மீட்க முயற்சி செய்தபோது அவர்களால் மீட்கமுடியவில்லை.

இதைத்தொடர்ந்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. குழித்துறை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்தவரை வலை மூலம் அரைமணி நேரம் போராடி மீட்டனர்.

அந்த வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் கிணற்றில் விழுந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து அவர் மீளமுடியாமல் இருந்ததால் அவரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது பெயர் ஸ்டீபன் (வயது 34) தொழிலாளியான அவர் அயனிவிளையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவர் போலீசாரிடம் கூறும்போது, இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தன்னை 3 பேய்கள் துரத்துவதாக கனவு வந்ததாகவும், இதனால் பயந்து வீட்டில் இருந்து ஓட்டம்பிடித்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டதாகவும் கூறினார். பேய் விரட்டியதால் கிணற்றில் விழுந்ததாக அவர் கூறியதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News