செய்திகள்
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி

புதுவையை திருநங்கை என்று அறிவித்து விடுங்கள் - நாராயணசாமி

Published On 2019-11-22 05:07 GMT   |   Update On 2019-11-22 05:07 GMT
மாநில அரசாகவோ, யூனியன் பிரதேசமாகவோ மத்திய அரசு புதுவையை அறிவிக்கவில்லை. புதுவையை திருநங்கை என அறிவித்து விடுங்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

இந்தியாவின் நிதி கூட்டாட்சி தத்துவத்தில் வளர்ந்து வரும் சவால்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு புதுவை ஓட்டல் செண்பகாவில் நடந்தது.

கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அவர் பேசியதாவது:-

புதுவையை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மாநிலத்தின் வருவாயில் 42 சதவீதம் போக மற்றவற்றை மத்திய அரசு வரியாக பெற்றுக்கொள்கிறது. ஆனால், மானியத்தை படிப்படியாக குறைத்துவிட்டது.

கடந்த காலத்தில் மத்திய அரசு 70 சதவீத மானியம் கொடுத்து வந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு மானியம் 26 சதவீமாக குறைக்கப்பட்டு விட்டது. பிற மாநிலங்கள் 42 சதவீத மானியத்தை பெறுகிறது.

அதைக்கூட யூனியன் பிரதேசமான புதுவைக்கு மத்திய அரசு வழங்கவில்லை. 7-வது சம்பள கமி‌ஷனை மத்திய அரசு அமல்படுத்தியது. புதுவையில் இதனை அமல்படுத்த ரூ.650 கோடி செலவிட்டோம். ஆனால், இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

புதுவையில் இயற்கை வளங்கள் இல்லை. சுற்றுலா, கலால் என குறுகிய வருவாய் வாய்ப்புகளே உள்ளது. டெல்லி யூனியனில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், புதுவைக்கு வழங்கவில்லை. இருப்பினும் புதுவையின் வளர்ச்சி 11.4 சதவீதமாக உள்ளது.

மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் புதுவையை மாநிலமாக கருதுகின்றனர். நிதி ஆதாரம் கேட்டால் யூனியன் பிரதேசம் என கூறுகின்றனர். ஆக, மாநில அரசாகவோ, யூனியன் பிரதேசமாகவோ மத்திய அரசு புதுவையை அறிவிக்கவில்லை. இதற்கு புதுவையை திருநங்கை என அறிவித்து விடுங்கள்.

ஒருபுறம் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது, மற்றொரு புறம் அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசுக்கு நெருக்கடி தருகின்றனர். 2 நெருக்கடிகளையும் சமாளித்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சமீபத்தில் உருவான ஜம்மு, காஷ்மீரைக்கூட 15வது நிதிக்குழுவில் சேர்த்து உள்ளனர். புதுவையையும் நிதிக்குழுவில் சேருங்கள் என்றால் மத்திய அரசு எந்த பதிலும் தரவில்லை.

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனாலும் தொடர்ந்து பணம் வழங்க நெருக்கடி கொடுக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.



கருத்தரங்கில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

சரக்கு மற்றும் சேவை வரி மூலம் மாநிலங்களில் அதிக நிதியை மத்திய அரசு வசூலிக்கிறது. ஆனால், மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியைகூட மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் தொகுதி மேம்பாட்டு பணியில் எங்களால் ஈடுபட முடியவில்லை.

மாநிலங்களின் உரிமை, நிதி பறிப்பு ஆகியவற்றையும் தாண்டி மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. இதற்கு உதாரணமாக தான் ஜம்மு காஷ்மீர். வருங்காலத்தில் மாநிலங்களே இல்லாத சூழலை கூட மத்திய அரசு உருவாக்கலாம்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

கருத்தரங்கில் கேரள மாநில நிதி மந்திரி தாமஸ் ஐசக், ஜம்மு, காஷ்மீர் முன்னாள் நிதி மந்திரி ஹசீப்திரபு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News