செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Published On 2019-11-22 04:35 GMT   |   Update On 2019-11-22 04:35 GMT
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் 4 பேருக்கு டிசம்பர் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
தேனி:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல், பிரியங்கா, இர்பான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் தந்தை டாக்டர் வெங்கடேசன், சரவணன், டேவிஸ், முகமதுசபி, தாய் மைனாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர்களின் பெற்றோர்களின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேனி சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள மாணவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ், முகமதுசபி, மைனாவதி ஆகியோர் 4-வது முறையாக காவல் நீட்டிப்பிற்காக தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் அவர்களுக்கு டிசம்பர் 5-ந் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் உள்ள டாக்டர் வெங்கடேசனை உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. எனவே இவ்வழக்கில் அவரையும் டிசம்பர் 5-ம் தேதியன்று ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

தர்மபுரி மாவட்டம் மூங்கிலன்கோட்டையை சேர்ந்த மருத்துவ மாணவி பிரியங்காவிற்கு கடந்த அக்டோபர் 31-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது. அவரது தாய் மைனாவதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மைனாவதி சார்பில் ஆஜரான வக்கீல்கள், அவருக்கு எதிரான குற்றசாட்டுக்கு முகாந்திரம் இல்லை, அவருக்கு அடிக்கடி உடல் நலபாதிப்பு ஏற்படுகிறது, மூத்த குழந்தை மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தாயாரின் கடமை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

நீதிபதி மனுதாரரின் உடல்நிலை, சிகிச்சை குறித்து விசாரணை அதிகாரி விசாரிக்கலாம் என்றும் வழக்கு வருகிற 25-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News