செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-11-21 09:55 GMT   |   Update On 2019-11-21 09:55 GMT
உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திருவொற்றியூர்:

திருவொற்றியூரில் தனியார் பள்ளி வெள்ளி விழா நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

மீனவர்கள் நலனில் அரசு எப்போதும் அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

உள்நாட்டு மீனவர்களுக்காக மத்திய- மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது. மீனவர் தினம் கன்னியாகுமரியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கல்விக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஒதுக்கி வருகிறது. கல்வி தொண்டில் தனியார் பள்ளிகள் பங்கெடுக்க விரும்பினால் அரசு தயாராக உள்ளது.

மெட்ரோ ரெயில் திருவொற்றியூர் வரை செல்லும் போது இந்த பகுதி மிகப்பெரிய வளர்ச்சி பெறும். நான் நிதி அமைச்சராக இருக்கும்போது வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ. 16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் தீட்டப்பட்டது. படிப்படியாக 5 ஆண்டுகளில் இந்த திட்டங்கள் நிறைவேறும். 2025-ல் எல்லா வசதிகளும் வரும்போது வடசென்னை நன்கு வளர்ச்சி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் உள்ளாட்சித்தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் தேர்தல் எப்படி நடந்தது என்பதை அனைவரும் அறிவோம். எங்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. எதிர்க்கட்சிகள் எங்களை குறை சொல்லிக் கொண்டிருக்ககூடாது. ஜனநாயக முறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மழை நின்ற பின்பு சென்னையில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News