செய்திகள்
திருவண்ணாமலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அணை கட்டுவதை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-21 09:28 GMT   |   Update On 2019-11-21 09:28 GMT
தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அணை கட்டுவதை கண்டித்து திருவண்ணாமலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை:

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ பாய்ந்து கடலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தின் எல்லையை ஒட்டி கர்நாடகா பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, புதிய அணை கட்ட, அம்மாநில அரசு திட்டமிட்டது. இதற்கான ஆய்வு பணிகளை, 2012-ல் கர்நாடகா அரசு தொடங்கியது.

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடகாவுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

மேலும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக உரிமையை பறிக்கின்ற தென்பெண்ணையாற்றின் திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அ.தி.மு.க. அரசை கண்டித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் அண்ணாசிலை அருகே தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால், திருவேங்கடம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழக உரிமையை பறிகொடுத்து விட்டதாக அ.தி.மு.க. அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.



Tags:    

Similar News