செய்திகள்
கனிமொழி

தமிழகத்தில் ஆளுமை வெற்றிடம் இல்லை - கனிமொழி

Published On 2019-11-21 08:39 GMT   |   Update On 2019-11-21 08:39 GMT
தமிழகத்தில் ஆளுமை வெற்றிடம் இல்லை என்று பாராளுமன்ற தேர்தலிலேயே திமுக நிரூபித்துள்ளதாக கனிமொழி கூறினார்.
புதுச்சேரி:

புதுவையில் நடந்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்க வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வின் வலியுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் குழப்பம் இல்லாமல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் விருப்பம்.

ஆனால், அ.தி.மு.க. நேரடியாக மேயர் தேர்தலை நடத்தினால் வெற்றி பெற முடியாது என்பதால் மறைமுக மேயர் தேர்தலுக்கு அறிவிப்பு செய்துள்ளனர்.

ஜம்மு, காஷ்மீரில் என்ன நடக்கிறது? என்பது வெளி உலகிற்கு தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினரான பரூக்அப்துல்லா கூட்டம் நடைபெறும்போது வரவில்லை.

இதுகுறித்து கேள்வி எழுப்பினால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் தரவில்லை. எங்களுக்கு பதில் தராத மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து எம்.பி.க்கள் குழுவை அழைத்து வந்து பார்வையிட செய்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களுக்கே தொகுதி மேம்பாட்டு நிதி முறையாக கிடைப்பதில்லை. அப்படியிருக்க வேறு கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு எப்படி நிதி அளிக்கும்?

நடிகர் கமல்ஹாசன் ஒரு கட்சி ஆரம்பித்தார். மற்றொருவர் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அவர் கட்சி தொடங்கி அவர்கள் இணைந்த பிறகு அவர்களைப்பற்றி பேசலாம். தமிழக அரசியலில் ஆளுமை வெற்றிடம் உருவாகி உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தி.மு.க.வை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலிலேயே ஆளுமை வெற்றிடம் இல்லை என நிரூபித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News