செய்திகள்
ஆட்டோ டிரைவர் இசை அரசு

சென்னை மக்களுக்கு ஒதுக்குப்புறமாக வீடுகள்: பாடல் மூலம் எதிர்ப்பை தெரிவிக்கும் ஆட்டோ டிரைவர்

Published On 2019-11-21 07:32 GMT   |   Update On 2019-11-21 07:32 GMT
சென்னை மக்களுக்கு ஒதுக்குப்புறமாக வீடுகள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இசை அரசு பாடல்களை பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சென்னை:

சென்னையில் வசிக்கும் குடிசை பகுதி மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதாக கூறி சென்னைக்கு வெளியே வீடுகள் கட்டி தரப்படுகிறது.

இது போன்று சென்னைக்கு வெளியே குடியேறும் மக்களின் குழந்தைகள் ஏற்கனவே தாங்கள் வசித்து வந்த பகுதியில் உள்ள பள்ளிகளிலேயே படிப்பை தொடர்கிறார்கள். இதற்காக அவர்கள் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இசை அரசு பாடல்களை பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மாற்று இடம் ஒதுக்குவதாக கூறி சென்னையில் உள்ள வீடுகளை இடிக்கும் இடங்களுக்கு சென்று பாடுவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.

சென்னையில் வசிக்க நமக்கு இடம் இல்லை... சிங்கார சென்னை யாருக்குன்னு தெரியலை... என்று தொடங்கும் பாடலை இசை அரசு தானே உருவாக்கி பாடி வருகிறார்.

நகர்ப்புற வளர்ச்சி என்கிற பெயரில், சென்னையில் வசிக்கும் பூர்வீக குடிமக்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. “சிங்கார சென்னை” என்ற பெயரில் முன்பு நடைபெற்ற இந்த முயற்சி இப்போது பல பெயர்களில் நடந்து வருகிறது. சென்னை மாநகருக்குள் புதிது புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சென்னை வாசிகள் யாரும் குடியேறுவதே இல்லை. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் சென்னையில் அதிகரித்துள்ளது.

இதுபோன்ற நிலை தொடர்ந்தால் சென்னையில், பூர்வீகமாக வசித்து வந்த சென்னை மக்கள் இல்லாமலேயே போய் விடுவார்கள். இந்த இடமாற்றத்தால் மாணவ- மாணவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். படிப்புக்காக பல மணி நேரம் வாகனங்களிலேயே பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற செயல்களே என்னை பாடல் பாட வைத்தது. இது தவிர விழிப்புணர்வு பாடல்களையும் நான்பாடி வருகிறேன்.

இவ்வாறு இசை அரசு கூறினார்.
Tags:    

Similar News