செய்திகள்
சாத்தூர் ராமச்சந்திரன்

ராஜேந்திர பாலாஜி வன்முறை பேச்சை தவிர்க்க வேண்டும்- சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

Published On 2019-11-20 14:49 GMT   |   Update On 2019-11-20 14:49 GMT
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனத்துக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு வன்முறை பேச்சுக்களை பேசக்கூடாது என்று சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகரில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என அடித்தளம் அமைத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி. தற்போது மத்திய அரசு விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்து விருதுநகரில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அருப்புக்கோட்டை, சாத்தூர் நகராட்சி பகுதி களில் தற்போதுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு சட்டசபையில் பல முறை வலியுறுத்தி பேசினேன். தற்போது தமிழக அரசு இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் முக்கிய அம்சமே குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதாகும். மேலும் இதற்கென அனைத்து நகராட்சி பகுதிகளிலும் புதிதாக பகிர்மான குழாய் அமைக்கப்பட உள்ளது. புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகளும் கட்டப்பட உள்ளன. இதனால் அருப்புக்கோட்டை, சாத்தூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

அமைச்சர் கே.டி.ராஜேந் திரபாலாஜி தி.மு.க.வினரின் சட்டையை பிடித்து கிழிப்போம், கதவை உடைப்போம் என பேசியுள்ளார். அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசுவது முறையல்ல. தி.மு.க.விற்கு யார் மீதும் வன்முறையை ஏவிவிடும் பழக்கம் கிடையாது. தலைவர் ஸ்டாலினும் இதுபோன்ற நடைமுறைகளை ஏற்றுக் கொள்பவர் அல்ல. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராகும் யோகம் இல்லை எனவும் கூறியுள்ளார். அமைச்சர் எப்போது ஜோதிடர் ஆனார் என தெரியவில்லை.

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கேட்டு தி.மு.க. வழக்கு தொடரவில்லை. தொகுதி வரையறை செய்ய வேண்டும் என வலியுறுத்திதான் வழக்கு தொடர்ந்தோம். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க.வுக்கு எந்த பயமும் இலலை.

அரசியல் வெற்றிடம் உள்ளது என ரஜினி கூறியிருக்கிறார். தி.மு.க.வில் வெற்றிடம் என்பது இல்லை. கருணாநிதி இருக்கும்போதே மு.க.ஸ்டாலின் கட்சி பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது அவர் சிந்தாமலும், சிதறாமலும் கட்சியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்தான் அ.தி.மு.க.வில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனத்துக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு வன்முறை பேச்சுக்களை பேசக்கூடாது. வன்முறையை தூண்டினால் தி.மு.க. காரர்களின் கைகள் புளியங்காய் பறித்துக் கொண்டு இருக்காது. எனவே அமைச்சர் ராஜேந் திரபாலாஜி வன்முறை பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News