செய்திகள்
2000 ரூபாய் நோட்டுகள்

பெரம்பலூரில் 5 பேரிடம் ரூ.78 லட்சம் பண மோசடி - வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2019-11-20 06:00 GMT   |   Update On 2019-11-20 06:00 GMT
பெரம்பலூரில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் செல்லாது என்று கூறி 5 பேரிடம் ரூ.78 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும் அரசு தீவிரமாக நடைமுறைக்கு கொண்டு வந்தது.

பொதுமக்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் புதிதாக ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் விரைவில் தடை செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வந்தனர். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்படாது என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இருப்பினும் ஒரு சிலர் இந்த தவறான தகவல்களை பரப்பியதோடு, பண மோசடியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் பெரம்பலூரில் மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:-

மதுரையை சேர்ந்தவர்கள் சவுந்தர்ராஜன், கார்த்தி, மும்மூர்த்தி. இவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களை பெரம்பலூர் மாவட்டம் எசனை அருகேயுள்ள பாப்பாங்கரை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அணுகினார்.

தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ.78 லட்சம் கடன் வழங்க வேண்டும். எனவே அந்த பணத்தை கொண்டு வருமாறு கூறியுள்ளார். அதன்படி நேற்று இரவு ரூ.78 லட்சம் பணத்துடன் காரில் 5 பேர் வந்துள்ளனர். பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் அவர்கள் சுரேசை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் கொண்டு வந்த பணம் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களாக இருந்தன. அதனை பார்த்த சுரேஷ் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் விரைவில் தடை செய்யப்பட உள்ளன. எனவே அந்த பணம் செல்லாதவையாகி விடும். அந்த பணத்தை 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்ற வேண்டும் என்று சுரேஷ் கூறியுள்ளார். தனக்கு தெரிந்த நபர் மூலம் 500 ரூபாய் மாற்றித்தருகிறேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதனை நம்பிய 5 பேரும் ரூ.78 லட்சத்தை சுரேசிடம் கொடுத்துள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட சுரேஷ் அங்கிருந்து தலைமறைவானார். அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகே அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.



பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் டி.எஸ்.பி. கென்னடி வழக்குப்பதிவு செய்து ரூ.78 லட்சம் பணத்துடன் தலைமறைவான சுரேசை தேடி வருகிறார்கள். ஏற்கனவே சுரேஷ் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

ஒரு மோசடி சம்பவத்தில் சுரேஷ் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து வந்தார். தற்போது வெளியே வந்த நிலையில் மீண்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

Tags:    

Similar News