செய்திகள்
கோப்பு படம்

டாஸ்மாக் பாரில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொலை மிரட்டல் - பார் ஊழியர் கைது

Published On 2019-11-19 10:22 GMT   |   Update On 2019-11-19 10:22 GMT
திருப்பூர் அருகே டாஸ்மாக பாரில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பார் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பகல் நேரங்களில் முறைகேடாக மதுவிற்கப்படுவதாக பறக்கும் படை அதிகாரி சுப்பிரமணியனுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவர் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு முறைகேடாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகிறார். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பாரிலும் பகல் நேரத்தில் முறைகேடாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து நேற்று பறக்கும் படை அதிகாரி சுப்பிரமணியன் அந்த பாரில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு முறைகேடாக மது விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு முறைகேடாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 56 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஊழியராக வேலை பார்த்து வரும் புதுக்கோட்டையை சேர்ந்த அருள்குமார்(26) என்பவர் அதிகாரியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

இதை பார்த்த அதிகாரியின் கார் டிரைவர், அருள்குமாரை தட்டிகேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அருள்குமார் கார் டிரைவரை தாக்கினர். இதுகுறித்து அதிகாரி சுப்பிரமணியன் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அருள்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News