செய்திகள்
தமிழக அரசு

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் - தமிழக அரசு

Published On 2019-11-19 09:44 GMT   |   Update On 2019-11-19 09:44 GMT
திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை தேர்வு செய்து அங்கு மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:

இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தற்போது 24 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 3,250 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழகத்தில் உள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசின் நிதிஉதவியுடன் 6 மருத்துவகல்லூரிகள் அமைக்க ஒப்புதல் கிடைத்தது. நாமக்கல், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.

இதற்கு தமிழக அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் நிதி ஒதுக்குவதற்கு முன்னதாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள உடனடியாக நிதி ஒதுக்கி மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணியை தொடங்க உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 4 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஏனைய 20 மாவட்டங்களில் 20 அரசு மருத்துவ கல்லூரிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. புதிதாக 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் அமைவதால் மொத்தம் 27 மாவட்டங்கள் இதன் மூலம் பயன்பெறும்.

இந்த நிலையில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடலோர மற்றும் பின் தங்கிய மாவட்டமான திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகியவற்றை தேர்வு செய்து அங்கு மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது.

மேலும் 3 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அபெக்ஸ் தொழில் நுட்ப கமிட்டி பச்சை கொடி காட்டியுள்ளது. இந்த 3 கல்லூரிகளிலும் தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் வீதம் மொத்தம் 450 இடங்களுடன் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆகஸ்டு மாதம் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் நாடு முழுவதும் 2021-22-ம் ஆண்டில் 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு, மாநில அரசுகள் பங்களிப்புடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

அதனை தொடர்ந்து மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அரசு முடிவு செய்து அதற்கான ஆவணங்களை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தொழில் நுட்ப கமிட்டியும் சமர்ப்பித்துள்ளார்.

மாவட்டத்துக்கு குறைந்தது ஒரு மருத்துவகல்லூரி வீதம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தர வேண்டும் எனவும் அவர் அந்த குழுவிடம் வலியுறுத்தினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.

வேளாங்கண்ணியில் கிறிஸ்தவ ஆலயம், நாகூர் தர்கா போன்ற சுற்றுலா மையங்கள் இருப்பதால் மக்களின் மருத்துவ தேவை அதிகம் உள்ளதையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம் இருப்பதையும் சுட்டி காட்டி இங்கு மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை 50 கி.மீ. தூரமாகும் அங்கிருந்து நோயாளிகள் சென்னை வருவதற்கு 3 மணி நேரம் ஆகிறது. அதனால் அங்கு புதிய மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்ற காரணத்தையும் கூறியுள்ளோம்.

கமிட்டி அனைத்து ஆவணங்களையும் ‘எம்பவர்’ கமிட்டிக்கு அனுப்பியுள்ளது. அக்கமிட்டி இதனை மேலும் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News