செய்திகள்
பாபநாசம் அணை

பாபநாசம்-சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

Published On 2019-11-19 08:16 GMT   |   Update On 2019-11-19 08:16 GMT
பாபநாசம்-சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை-பாளை நகர் புறங்களில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதுபோல முக்கிய நகரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.

இந்த நிலையில் நேற்று இரவும் தொடர் மழை பெய்தது. இன்றும் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 50 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,539 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று 131.40 அடியாக உள்ளது. பாபநாசம் அணை நிரம்ப இன்னும் 12½ அடியே இருக்கிறது.

இதுபோல சேர்வலாறு அணை நீர்மட்டமும் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து, இன்று காலை 145.83 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நிரம்ப இன்னும் 10 அடியே உள்ளது. ஏற்கனவே தென்மேற்கு பருவமழை காலத்தில் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 130 அடிக்கு மேல் உயர்ந்தது. தற்போது அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மணிமுத்தாறு அணைக்கு வடகிழக்கு பருவமழையின் போது மட்டுமே அதிக தண்ணீர் வரத்து இருக்கும். இதனால் தற்போது தான் மணிமுத்தாறு அணை நிரம்பி வருகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 416 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதனால் அந்த அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று 68.90 அடியாக உள்ளது. ஏற்கனவே கடனாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. ராமநதி, கருப்பாநதி ஆகிய அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.

தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளதால் பெரும்பாலான அணைகளில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் ஆறுகளில் மழைநீர் வெள்ளமாக செல்கிறது. தாமிரபரணி, சிற்றாறு உள்பட அனைத்து கிளை ஆறுகளிலும் தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. மழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குளங்களும் நிரம்பி உள்ளன.
Tags:    

Similar News