செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலையில் 12 வயது தமிழக சிறுமியை தடுத்து நிறுத்திய போலீசார்

Published On 2019-11-19 07:59 GMT   |   Update On 2019-11-19 07:59 GMT
சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது தமிழக சிறுமியை இன்று போலீசார் தடுத்து நிறுத்தினர்.
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் நுழைந்து பிரச்சினை ஏற்படுவதை தடுக்க கேரள போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இதற்காக பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார் பெண் பக்தர்களின் வயது சான்றை சரிபார்த்தபிறகே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கிறார்கள். 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களை அவர்கள் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

கடந்த 16-ந் தேதி நடைதிறந்த அன்று ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை போலீசார் பம்பையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதேபோல நேற்று காலை நிலக்கல்லில் 2 ஆந்திர இளம்பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் இன்று காலை தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது தந்தையுடன் குழுவாக சபரிமலைக்கு வந்தார். பம்பையில் சோதனை செய்த போலீசார் அந்த சிறுமிக்கு 12 வயது ஆவதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவரை கோவிலுக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. சிறுமியின் தந்தை மட்டும் கோவிலில் தரிசனம் செய்தனர். பின்னர் மகளை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினர்.

கடந்த ஆண்டு சபரிமலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் பம்பைக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட்டு சிறிய வாகனங்கள் பம்பை வரை சென்று பக்தர்களை இறக்கி விட்டு திரும்ப நிலக்கல் வந்து விட வேண்டும் என இன்று உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News