செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு போலீஸ் நிலையம்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக குழந்தைகள் பாதுகாப்பு போலீஸ் நிலையம்

Published On 2019-11-18 08:01 GMT   |   Update On 2019-11-18 08:01 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக இன்று 3 இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.
திருவள்ளூர்:

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1269 பெண்கள் காவல் நிலையத்தை உதவிக்காக அணுகியுள்ளனர். அவர்களில், சுமார் 640 பேர் குழந்தையுடன் காவல் நிலையத்தை அணுகி இருக்கிறார்கள்.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு காவல்துறை பிரிவும், இன்டர்நே‌ஷனல் ஜஸ்டிஸ் மி‌ஷன் என்ற அமைப்பும் இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தேர்ந்தெடுத்து அதில் தனியாக குழந்தைகள் நேய பாதுகாப்பு நிலையத்தை திறக்க முடிவுசெய்தது.

அதன்படி முதல் கட்டமாக இன்று திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டையில் குழந்தை நேய போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.

இதற்காக மகளிர் போலீஸ் நிலையங்களில் தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளன. அதன் சுவற்றில் கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு உள்ளது. அந்த அறையில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், சாப்பிடும் வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது.

வழக்கு சம்பந்தமாக குழந்தைகளிடம் தகவல் சேகரிக்கும் போதும் அவர்களை அணுகும் போதும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் நிலையத்தில் குழந்தைகள் நேய முறையில் அணுக வலியுறுத்தப்பட்டு உள்ளது.

திருவள்ளூரில் குழந்தைகள் நேய பாதுகாப்பு போலீஸ் நிலையத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News