செய்திகள்
ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்

2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை ரெயில் மீண்டும் இன்று முதல் இயக்கம்

Published On 2019-11-14 04:24 GMT   |   Update On 2019-11-14 04:24 GMT
ரெயில் பாதையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணி காரணமாக 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது.
மேட்டுப்பாளையம்:

மலைகளின் அரசி, சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். பழமை வாய்ந்த அழகிய மலை ரெயிலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி- ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் பெரிய மற்றும் சிறிய அளவிலான பாறாங்கற்கள் உருண்டு விழுந்து கிடந்தன. இதனையடுத்து மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து கடந்த 12 மற்றும் 13-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் குன்னூர் மலை ரெயில் இருப்புப் பாதை பொறியாளர் ஜெயராஜ் தலைமையில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ரெயில் தண்டவாளங்களில் கிடந்த பாறைகளை வெடி வைத்து தகர்த்தனர். ரெயில் பாதை சீரமைக்கும் பணி நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இதையடுத்து 2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்ட மலை ரெயிலில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News