செய்திகள்
திருமாவளவன்

வெற்றிடம் பற்றி ரஜினி கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாது- திருமாவளவன் பேட்டி

Published On 2019-11-13 14:01 GMT   |   Update On 2019-11-13 14:01 GMT
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியில் வெற்றிடம் உள்ளது என்று பேசி உள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் கடந்த 3ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள், அங்குள்ள திருவள்ளுவர் சிலையை அவமதித்தனர். இதையடுத்து அங்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ருத்ராட்ச மாலை அணிவித்து காவியுடை அணிவித்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் கருத்தை தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை சுற்றி கூண்டு அமைக்கப்பட்டு 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு தஞ்சை வழியாக திருவாரூருக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

குடவாசலில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது...

தஞ்சாவூர் பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து திருநீர் பட்டை, நாமம் போட்டு திருவள்ளுவரை ஒரு இந்துவாக சித்தரிக்கும் பா.ஜனதா கட்சியினரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் திருவள்ளுவர் உலகிற்கு பொதுவானவர். திருக்குறள் பொதுமறை என இருக்கும் போது இந்துத்துவா கொள்கையுடன் திருக்குறளை திணிக்கவும் முனைந்துள்ளது.  

பா.ஜனதா எப்படி இருந்தாலும் திருவள்ளுவரை காவிதுண்டு அணிவித்து அவமரியாதை செய்தவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ரஜினி தமிழகத்தில் அரசியில் வெற்றிடம் உள்ளது என்று பேசி உள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News