செய்திகள்
பாண்டிபஜார்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் நவீனமாக மாறிய தி.நகர் பாண்டிபஜார்

Published On 2019-11-13 06:46 GMT   |   Update On 2019-11-13 06:46 GMT
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் தி.நகர் பாண்டிபஜாரில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்படும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னையின் முக்கிய வர்த்தக தலமாக விளங்கும் தி.நகர் பாண்டிபஜாரில் ரூ.39.86 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது.

தி.நகர் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீட்டர், தணிகா சலம் சாலை முதல் போக் சாலை வரை 380 மீட்டர், போக் சாலை முதல் அண்ணா சாலை வரை 564 மீட்டர் என 3 கட்டங்களாக நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நடந்தது.

இதில் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணிகாசலம் சாலை முதல் போக்சாலை வரையும் நடைபாதை அமைக்கும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.

சாலையின் இருபுறமும் சுமார் 10 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகத்தில் மழைநீர் வடிகால், மின்சாரம், தொலைபேசி கட்டமைப்பு, குடிநீர் மற்றும் புதை சாக்கடை குழாய்கள் ஆகிய அனைத்தும் செல்லும் வகையில் முழுமையான சாலையாக கட்டமைக்கப்பட்டுள்ளன.

நடைபாதை வளாகத்தின் சுற்றுச்சுவர்களில் வண்ண மிகு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், முதியோர்கள் அமரும் வகையில் வண்ணமயமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மரங்களும் நடப்பட்டுள்ளன.

பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணிகாசலம் சாலை முதல் போக் சாலை வரையும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

போக்சாலை முதல் அண்ணா சாலை வரையிலான நடைபாதை வளாகம் சில நாட்கள் கழித்து திறந்து வைக்கப்பட உள்ளது.

நடைபாதை வளாகம் திறப்பு விழாவையொட்டி தி.நகரில் இன்று மாற்று வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தியாகராய நகரில் சீர் மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.39.86 கோடி மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் மற்றும் ரூ.19.11 கோடி மதிப்பீட்டில் 23 சீர்மிகு சாலைகளை இன்று மாலை 6 மணி அளவில் பனகல் பூங்கா அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார்.

இதையொட்டி இன்று தியாகராய நகர் பகுதி வணிக வளாகங்களுக்கு வரும் பொதுமக்களும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் பிரமுகர்களும் தங்களின் வாகனங்களை நிறுத்த பெருநகர சென்னை மாநகராட்சியில் பிரத்தியேக வாகன நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

எனவே தியாகராய நகர் நடைபாதை வளாகம் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் போக்குவரத்து இடையூறை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களின் வாகனங்களை தியாகராய சாலையில் நிறுத்துவதைத் தவிர்த்து தியாகராயநகர் பிரகாசம் சாலையில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளி, சிவஞானம் சாலை, பனகல் பூங்கா ஒட்டிய பகுதிகள், முத்துகிருஷ்ணன் தெரு, ஸ்ரீனிவாசன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள உள்புற சாலைகளில் தங்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News