செய்திகள்
டாஸ்மாக் கடை சுவரில் துளை போடப்பட்டு இருக்கும் காட்சி.

திருக்கோவிலூரில் சுவரில் துளை போட்டு டாஸ்மாக் கடைகளில் கொள்ளை

Published On 2019-11-13 05:06 GMT   |   Update On 2019-11-13 05:06 GMT
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சுவரில் துளை போட்டு டாஸ்மாக் கடைகளில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சந்தைபேட்டை கனகநந்தல் சாலை பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இரவு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர்.

நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அங்கு டாஸ்மாக் கடை ஒன்றின் பூட்டுகளை உடைத்து கல்லாவை பார்த்தனர். அங்கு பணம் எதுவும் இல்லாததால் மதுப்பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை தூக்கி சென்றனர்.

அதன்பின்னர் அருகில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் பூட்டை உடைக்க முயற்சித்தனர். ஆனால் பூட்டுகளை உடைக்க தாமதம் ஆனது. எனவே கடையின் சுவரை எந்திரம் மூலம் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை போட்டனர். அங்கும் கல்லாவில் பணம் இல்லை. உடனே மர்ம நபர்கள் மதுபாட்டில்கள், 4 சி.சி.டி.வி. கேமிரா, கார்டு டிஸ்க் ஆகியவற்றை எடுத்து கொண்டு தலைமறைவானார்கள்.

டாஸ்மாக் கடைகள் திறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடைகளுக்கு விரைந்தனர். அப்போது கடை திறந்து கிடப்பதை கண்டும், சுவரில் துளை போட்டு இருப்பதையும் பார்த்து திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது கடைகளில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. அதோடு மதுபாட்டில்கள் கொள்ளை போய் இருந்ததால் மர்ம நபர்கள் அருகில் அவைகளை வீசிசென்று உள்ளனரா? என்று தேடி பார்த்தனர்.

ஆனால் மதுபாட்டில்கள் எதுவும் கிடைக்கவில்லை. கொள்ளை நடந்த நாளில் அன்றைய பணத்தை ஊழியர்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்ததால் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை.

இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணாளன், ஏழுமலை ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தார். கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் ரேகையை பதிவுசெய்து துப்புதுலக்கி வருகிறார்கள். கொள்ளையர்களை போலீசார் வலை வீசிதேடி வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள நகை கடையில் மர்ம நபர்கள் சுவரில் துளை போட்டு பல கோடிரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அதே போல திருக்கோவிலூர் பகுதியில் உள்ள கடைகளிலும் கொள்ளையடிக்கும் நோக்கில் இதுபோன்ற ஒத்திகை பார்த்துள்ளதாக கருதுகிறோம்.

எனவே போலீசார் இந்த விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News