செய்திகள்
ராஜேஸ்வரி - விபத்துக்குள்ளான ஸ்கூட்டர், லாரி சக்கரத்துக்குள் சிக்கியிருப்பதை படத்தில் காணலாம்.

கொடிக்கம்பம் சாய்ந்ததால் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

Published On 2019-11-13 03:16 GMT   |   Update On 2019-11-13 03:16 GMT
ஸ்கூட்டரில் சென்றபோது அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் லாரி சக்கரத்துக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை:

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதன். இவருடைய மகள் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(வயது 31). இவர், சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கணக்காளராக வேலைபார்க்கிறார். நேற்று முன்தினம் காலை ராஜேஸ்வரி வேலைக்கு செல்வதற்காக தனது ஸ்கூட்டரில் புறப்பட்டார். அவர் பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதி வழியாக சென்றார். அப்போது அந்த பகுதி சாலை தடுப்பில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. அதில் ஒரு கொடிக்கம்பம் திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ராஜேஸ்வரி, தன்மீது கொடிக்கம்பம் விழாமல் தவிர்ப்பதற்காக திடீர் பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறிய அவர், தனது ஸ்கூட்டரோடு சறுக்கி கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ராஜேஸ்வரியின் கால் மீது ஏறியது. அவரது இரண்டு கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கியதால், கால்கள் முறிந்து படுகாயம் அடைந்தார். விபத்து காரணமாக லாரி வலதுபுறம் ஏறிநின்றது. லாரி சக்கரத்துக்குள் ராஜேஸ்வரியின் ஸ்கூட்டர் கிடந்தது. இதற்கிடையே அந்த வழியாக விஜயானந்த் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், எதிர்பாராத விதமாக அதே லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த விஜயானந்த் காயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்த விஜயானந்த் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் அந்த பகுதியில் சில மீட்டர் தூரத்துக்கு நடப்பட்டு இருந்த அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. ராஜேஸ்வரியின் உறவினர் சிவன் கூறும்போது, ‘சாலையில் வைக்கப்பட்டு இருந்த அ.தி.மு.க. கட்சிக்கொடிகம்பம் சாய்ந்ததால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி பிரேக் போட்டுள்ளார். அப்போது கீழே விழுந்தததில் பின்னால் வந்த லாரி ஏறியதில் அவர் கால் நசுங்கி படுகாயம் அடைந்துள்ளார்’ என்று கூறினார்.

சம்பவம் குறித்து கோவை நகர போக்குவரத்து புலனாய்வு கிழக்குப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, விபத்து நடந்தது உண்மை. அதேசமயம் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் முருகன்(53) என்பவரை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.



படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் ரோட்டில் வைத்த அ.தி.மு.க. பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் இறந்தார். இந்த நிலையில் கோவையில் நடந்த இந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News