செய்திகள்
பலியான கார் டிரைவர் - விபத்தில் காரும் லாரியும் தீ பற்றி எரியும் காட்சி

கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உடல் கருகி பலி: விபத்து நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்

Published On 2019-11-12 10:15 GMT   |   Update On 2019-11-12 10:15 GMT
ராயக்கோட்டை அருகே கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கார் டிரைவர் உடல் கருகி பலியானார். இந்த விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்த்பாபு (வயது 46). இவர் உத்தனப்பள்ளி அருகே நாயக்கனப்பள்ளி பகுதியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி நீலிமா (42).

இந்த நிலையில் நேற்று ஆனந்த்பாபுவும், நீலிமாவும் காரில் கம்பெனிக்கு சென்றனர். நேற்று இரவு நீலிமா கம்பெனியில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பி சென்றார்.

அந்த காரை கெலமங்கலம் அருகே எஞ்சட்டிபள்ளி பகுதியை சேர்ந்த முரளி (25) என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த கார் ஓசூரை அடுத்த பீர்ஜேபள்ளி, சானமாவு வனப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே வந்தது. அப்போது எதிரே ஓசூரில் இருந்து ராயக்கோட்டையை நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று டிரைவர் முரளி ஓட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் காரும், டிப்பர் லாரியும் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்த நீலிமாவும், டிரைவர் முரளியும் வெளியே வர முடியாமல் அலறினர். டிப்பர் லாரியில் இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து காருக்குள் சிக்கிய நீலிமாவை மீட்டனர். அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த டிரைவரை மீட்க முயன்றனர். கார் தீப்பிடித்து மளமளவென எரிந்ததால் அவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து அவர்கள் ஓசூர் மற்றும் ராயக்கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் காரும், லாரியும் முழுவதும் எரிந்து சேதம் ஆனது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் முரளி தீயில் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீயை முழுவதும் அணைத்த பிறகே முரளியின் உடலை கருகிய நிலையில் மீட்டு காரில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ஆனந்தன் மற்றும் போலீசார் அங்கு சென்று விபத்தில் இறந்த டிரைவர் முரளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த லாரி மதுரை மாவட்டத்தை சேர்ந்தவருடையது என்பதும், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு நபருக்கு விற்று விட்டதாகவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிப்பர் லாரியை வாங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விபத்தால் ஓசூர்-தர்மபுரி சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News