செய்திகள்
தேனி கோர்ட்டில் சரண் அடைந்த செல்வம்

துப்பாக்கியால் சுட்டு மாணவர் பலி - போலீசாரால் தேடப்பட்ட சென்னை ரவுடி தேனியில் சரண்

Published On 2019-11-12 08:50 GMT   |   Update On 2019-11-12 08:50 GMT
துப்பாக்கியால் சுட்டு மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட சென்னை ரவுடி தேனி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தேனி:

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் அடுத்துள்ள வேங்கடமங்கலத்தை சேர்ந்தவர் முகேஷ் (வயது19). பாலிடெக்னிக் மாணவரான இவர் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் விஜய் (21) வீட்டிற்கு கடந்த 5-ந் தேதி சென்றார்.

இருவரும் தனி அறையில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது முகேஷ் நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார்.

விஜய் துப்பாக்கியுடன் தப்பி ஓடினார். தாழம்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் விஜய், ரவுடி கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியை காட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் அவருக்கும் கூடுவாஞ்சேரி ரவுடி செல்வத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவருடன் சேர்ந்துதான் விஜய் கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் செல்வம் தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



Tags:    

Similar News