செய்திகள்
அருண்குமார்

ராயப்பேட்டை வணிகவளாகத்தில் வி‌ஷவாயு தாக்கி வாலிபர் பலி

Published On 2019-11-12 05:08 GMT   |   Update On 2019-11-12 08:47 GMT
சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிகவளாகத்தில் இன்று காலை விஷவாயு தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கீழ்தளத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று காலை 4 மணி அளவில் நடைபெற்றது.

ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் இதற்காக ஆட்களை அழைத்துச் சென்றுள்ளார். அருண்குமார், அவரது தம்பி ரஞ்சித்குமார் மற்றும் யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 பேர் சென்றனர். கழிவுநீர் தொட்டியில் இறங்கி ரஞ்சித் குமார் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென வி‌ஷவாயு தாக்கியது. இதில் ரஞ்சித் குமார் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் அருண்குமார் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தம்பி ரஞ்சித்குமாரை தூக்கி வெளியில் விட்டார். பின்னர் அவரது மயக்கம் தெளிந்தது.

ஆனால் அருண்குமார் தொட்டியில் இருந்து வெளியே வரவில்லை வி‌ஷவாயு அவரையும் தாக்கியது. இதில் கழிவுநீர் தொட்டியிலேயே அவரும் மயங்கினார். அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அருண்குமாரின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருண் குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததா? கவனக்குறைவாக கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்ததா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News