செய்திகள்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின்.

திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2019-11-11 09:18 GMT   |   Update On 2019-11-11 09:18 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
சென்னை:

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்தது. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 65 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நேற்றைய தினம் (10-ந்தேதி), நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழக வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு, பகல் கொள்ளை உளுத்துப் போன ஊழல் எதற்கும் லஞ்சம் எங்கும் கமி‌ஷன் என்று, அவமானகரமான ஆட்சி ஒன்றை நடத்தி வரும் அதிமுக அரசையும் மற்றும் அது தனது அடிவருடும் ஆட்சி என்பதால், அதற்கு அனைத்து வகையிலும் பலத்த பாதுகாப்பு அளித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட, 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

அந்தத் தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கிட, தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும், மிகச் சிறப்பான பயனளித்திடும் வகையில், வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) ‘தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை’ நடத்திட மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்ட 20 தீர்மானங்களில் குறிப்பாக, “பொய்களைச் சொல்லியே பொழுது போக்கி, இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க.”, “ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் அதிமுக ஆட்சி”, “ஊழலில் திளைக்கும் அதிமுக அமைச்சர்களின் மீதான வருமான வரித்துறை ரெய்டு”, “உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பா.ஜ.க. அரசு”, “மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத திட்டங்களுக்கு துணைபோகும் அதிமுக அரசு” ஆகிய தீர்மானங்களை, மக்கள் மனங்களில் ஆழப் பதிந்திடும் வண்ணம், துண்டுப்பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்கள்தோறும் விநியோகித்திட ஆவன செய்வதென்றும்; தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரசாரங்கள் மேற்கொள்வதென்றும்; கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
Tags:    

Similar News