செய்திகள்
மரணம்

கரூரில் வகுப்பறையில் பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published On 2019-11-11 07:41 GMT   |   Update On 2019-11-11 07:41 GMT
கரூரில் இன்று காலை வகுப்பறையில் பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர்:

கரூர் வடக்கு பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் கோமதி (வயது 17). இவர் கரூர் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கோமதி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஓரளவு உடல்நலம் தேறிய அவர் தொடர்ந்து பள்ளிக்கு வந்து சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை பெற்றோரிடம் கூறிவிட்டு வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பறையில் அமர்ந்திருந்தார். பின்னர் கழிவறைக்கு சென்று விட்டு மீண்டும் வந்த அவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆசிரியர்களிடம் கூறினர். பின்னர் ஆம்புலன்சு வேன் வரவழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர் கோமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலைப்பார்த்து கதறி அழுதனர். கோமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பான சூழல் உருவானது. ஏராளமான போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உடல் நலக்குறைவு காரணமாக அவர் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும். இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News