செய்திகள்
வைகை அணை

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு - மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2019-11-11 06:15 GMT   |   Update On 2019-11-11 06:15 GMT
தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மதுரை:

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2 தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 65 அடியை தாண்டியது.

இதையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய பணிக்காக வைகை அணை திறக்கப்பட்டது.

3,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வைகை ஆற்றில் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரையில் வைகை ஆற்றில் பல மாதங்களுக்கு பிறகு இருபுற கரைகளையும் தொட்டு ஓடும் வெள்ளத்தை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று மாலை மதுரையில் வைகையின் குறுக்கே கல்பாலம் மற்றும் ஆழ்வார்புரம் நெல்பேட்டையை இணைக்கும் தரைப்பாலம் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின.

தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

மேலும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

வைகை ஆற்றில் வெள்ளத்தை செல்பி எடுக்கவும், ஆற்றில் குளிக்கவும் போலீசார் தடை விதித்தனர்.

ஆற்றின் குறுக்கே உள்ள சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வைகையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மக்களை மகிழ்ச்சி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.



Tags:    

Similar News