செய்திகள்
தயாநிதி

உயரத்தை அதிகரிக்க தலையில் சுவிங்கம் ஒட்டி வந்த வாலிபர் சிக்கினார் - காவலர் தேர்வில் ருசிகரம்

Published On 2019-11-09 03:09 GMT   |   Update On 2019-11-09 03:09 GMT
சேலத்தில் நடந்த காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் உயரத்தை அதிகரிக்க தலையில் சுவிங்கம் ஒட்டி வந்த வாலிபர் போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கினார்.
சேலம்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

3-வது நாளான நேற்று உடற்தகுதி தேர்வுக்கு 555 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தேர்விற்காக ஏராளமானவர்கள் அதிகாலையிலேயே ஆயுதப்படை மைதானம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் சோதனைக்கு பிறகு மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர். அங்கு தேர்வாளர்களின் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தனர்.



இதையடுத்து தேர்வாளர்களுக்கு உயரம் அளவீடுதல், மார்பளவு அளவீடுதல் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய தேர்வு நடத்தப்பட்டது. இந்த உடற்தகுதி முழுவதும் வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தயாநிதி(வயது 22) என்ற வாலிபருக்கு போலீசார் உயரம் அளவீடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அவருக்கு தலைமுடி அதிகமாகவும், அதற்குள் ஏதோ ஒரு பொருள் இருப்பது போலவும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த வாலிபரின் தலைமுடியை கலைத்தனர்.

அப்போது தலைமுடிக்குள் அந்த வாலிபர் சுவிங்கத்தை உருண்டையாக ஒட்டி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தயாநிதியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் போலீஸ் பணியில் சேர 170 சென்டி மீட்டர் உயரம் தேவையான நிலையில், தயாநிதி 169 சென்டி மீட்டர் இருந்ததால் உயரத்தை அதிகரித்து காட்டுவதற்காக தலையில் அவர் சுவிங்கத்தை ஒட்டி வந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை தகுதிநீக்கம் செய்து எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
Tags:    

Similar News