செய்திகள்
தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளூவர் சிலை அருகே இரும்பு தடுப்பு போடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

ருத்ராட்சம், காவி துண்டு அணிவிப்பு எதிரொலி- திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க தடை

Published On 2019-11-07 05:24 GMT   |   Update On 2019-11-07 05:24 GMT
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இரும்பு கம்பிகளால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை அணிவிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்மநபர்கள் சேறு, சகதியை வீசி அவமதிப்பு செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார். மேலும் சிலை நெற்றியில் திருநீறு பூசி, தீபாராதனை வழிபாடும் நடந்தது.

ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி வருவதாக தி.மு.க. குற்றம்சாட்டி வரும் நிலையில் காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் பிற அமைப்பினரும், மதத்தினரும் திருவள்ளுவர் சிலைக்கு வந்து பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் ஏதாவது செய்ய முயற்சி செய்யக்கூடும் என்று போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது திருவள்ளுவர் சிலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இரும்பு கம்பிகளால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை அணிவிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை அருகே யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக சிலையை சுற்றிலும் இரும்பு கம்பியால் ஆன தடுப்புகளை போலீசார் அமைத்தனர்.

மேலும் பிள்ளையார்பட்டி மெயின் ரோட்டில் இருந்து திருவள்ளுவர் வீதிக்கு செல்லும் வழியில் இரும்பு கம்பியால் ஆன தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். அந்த வீதியில் இருசக்கர வாகனத்தை மட்டுமே போலீசார் அனுமதித்து வருகிறார்கள்.

மேலும் திருவள்ளுவர் வீதிக்கு செல்பவர்கள் யாராவது மாலை கொண்டு செல்கிறார்களா? என்றும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News