செய்திகள்
ஜெயலலிதா

ஜெயலலிதாவின் சொத்துக்கள் கணக்கெடுப்பு தொடங்கியது

Published On 2019-11-04 09:22 GMT   |   Update On 2019-11-04 09:22 GMT
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்கள் இருப்பின் அதுகுறித்த விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் இருந்து வட்டாட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

ஜெயலலிதா உள்பட 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 5.12.2016 அன்று ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

இந்த வழக்கில் 14.2.2017 அன்று பெங்களூர் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. தீர்ப்பு வழங்கப்பட்ட போது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் அவர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதனால் கர்நாடக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது. அதில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை யாரிடம் வசூலிப்பது என்று கேட்கப்பட்டு இருந்தது. இந்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு 28.9.2018-ல் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்னவாகும் என்கிற சூழ்நிலை இருந்தது. தற்போது அவரது சொத்துக்கள் அனைத்தையும் கணக்கெடுக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த அறிக்கையை விரைவாக அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் இருந்து வட்டாட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்கள் இருப்பின் அதுகுறித்த விவரத்தையும், இல்லை என்றால் “இனம் இல்லை” என குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News