செய்திகள்
கோவை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம்.

கோவை, நீலகிரி, திருப்பூரில் 6 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2019-11-04 07:10 GMT   |   Update On 2019-11-04 07:10 GMT
டெல்லியில் உள்ள திஸ்ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோவை, நீலகிரி, திருப்பூரில் 6 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கோவை:

டெல்லியில் உள்ள திஸ்ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வக்கீல்கள் தாக்கப்பட்டனர்.

இதனை கண்டித்து தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு தமிழ்நாடு,புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வக்கீல்கள் சங்கத்தினர், கோவை மாவட்ட வக்கீல் சங்கத்தினர் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் பணிக்கு வரவில்லை.

கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் 400 வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல வால்பாறை, சூலூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள கோர்ட்டுகளை 250-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, காங்கயம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளை 1,500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் தேக்கம் அடைந்தது.
Tags:    

Similar News