செய்திகள்
டெங்கு காய்ச்சல்

தாராபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

Published On 2019-11-04 04:18 GMT   |   Update On 2019-11-04 04:18 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம், மேற்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. தொழிலாளி. இவரது மகன் வேல்முருகன் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக வேல்முருகன் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து தளவாய்பட்டிணத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வேல்முருகன் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேல்முருகன் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் வேல்முருகனை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். ரத்த அணுக்கள் குறைந்த நிலையில் சிகிச்சை பெற்றதால் வேல்முருகன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி விட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சுகாதாரத்துறையினர் தளவாய்பட்டிணம், பாப்பையன்புதூர், திருமலைபாளையம் ஆகிய இடங்களில் முகாம் அமைத்து டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தொடர்ந்து காய்ச்சல் இருப்பவர்கள் மேல்சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலியானதால் மற்ற மாணவர்களுக்கும் டெங்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
Tags:    

Similar News