செய்திகள்
வக்கீலுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் நடைபெற்ற காட்சி

ஹெல்மெட் சோதனையில் வக்கீலை தாக்கிய 2 போலீசாருக்கு அபராதம்

Published On 2019-11-01 08:38 GMT   |   Update On 2019-11-01 08:38 GMT
ஹெல்மெட் சோதனையில் வக்கீலை தாக்கிய 2 போலீசாருக்கு அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான், மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளேன். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றேன். அப்போது எனது மகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவரை எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டேன்.

அந்த பகுதியில் உள்ள கல்லூரி அருகே சென்றபோது நான் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி 2 போலீசார் என்னை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி என்னை தாக்கி கைது செய்து சிறையில் அடைத்தனர்.



மறுநாள் காலை என்னை சிவகிரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அங்கு எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி அவசர மனு தாக்கல் செய்தேன். கோர்ட்டு எனக்கு ஜாமீன் வழங்கியது. என்னுடன் தகராறில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் ஏட்டுகள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது அவர்கள் பறிமுதல் செய்த வாகனத்தை வக்கீலிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் போலீஸ் ஏட்டுகள் இருவரும் மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வக்கீலிடம் அளிப்பதோடு தலா ரூ.1,001-க்கு வரைவோலையாக எடுத்துக் கொடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் வக்கீல்களும், காவல்துறையினரும் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல் துறையினர் தங்களிடம் உள்ள சீருடை, துப்பாக்கி, லத்தி ஆகியவற்றை நல்லதற்கே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News