செய்திகள்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தாயகத்தில் நடந்தது.

மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்- மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2019-10-31 09:20 GMT   |   Update On 2019-10-31 09:20 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தபடி மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

ம.தி.மு.க. தலைமை கழகமான தாயகத்தில் இன்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்துக்கு அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். இதில் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன. எனவே ஆபத்தை எதிர்நோக்கி உள்ள இந்த அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளா-தமிழக முதல்-அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் கேரள அரசு புதிய அணை கட்டுவதிலேயே கவனமாக உள்ளது. எனவே தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடுக்காட்டுப்பட்டி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து உயிர் இழந்த குழந்தை சுஜித்துக்கு இரங்கல் இதுபோன்ற உயிர்பலிக்கு இதுவே இறுதியாக இருக்க வேண்டும். விபத்துக்களில் குழந்தைகளை மீட்க நவீன தொழில்நுட்பத்துடன் கருவிகளை உருவாக்க வேண்டும்.

இந்திய விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனை 456.15 கோடியாக உயர்ந்துள்ளது. இது மோசமானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தபடி மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மாணவர்களின் விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புயல் தீவரமாகிவரும் நிலையில் குமரி மாவட்டத்தில் கடலில் சிக்கி உள்ள மீனவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News