செய்திகள்
நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்திற்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

சுஜித்திற்கு அஞ்சலி செலுத்த நடுக்காட்டுப்பட்டியில் திரளும் பொதுமக்கள்

Published On 2019-10-30 07:24 GMT   |   Update On 2019-10-30 07:24 GMT
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித்திற்கு நடுக்காட்டுப்பட்டியில் பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கிய ராஜ்-கலாமேரி தம்பதியின் 2வயது குழந்தை சுஜித், கடந்த 25-ந்தேதி மாலை வீட்டருகே உள்ள வயலில், பயன்பாட்டில் இல்லாத 650அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அவனை மீட்க 5 நாட்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது தோல்வியிலேயே முடிந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை சுஜித்தின் உடல் பிணமாக மீட்கப்பட்டு, மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர்நடுக்காட்டுப்பட்டி பாத்திமாபுரம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சுஜித்தின் மறைவையடுத்து அவன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் முத்தரசன், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் விமல், சினேகன் ஆகியோர் நேற்று நடுக்காட்டுப்பட்டிக்கு நேரில் வந்து சுஜித்தின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவனது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். தி.மு.க. சார்பில் ரூ.10லட்சம் நிதியை மு.க.ஸ்டாலின் சுஜித்தின் பெற்றோரிடம் வழங்கினார்.அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

சுஜித் கடந்த 25-ந்தேதி மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததும் அவன் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்று தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பொதுமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் சுஜித்திற்காக தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பிரார்த்தனை பலிக்காமல் சுஜித் உயிரிழந்தது பொதுமக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து சுஜித்திற்கு அஞ்சலி செலுத்த சென்னை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் நடுக்காட்டுப்பட்டிக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். பாத்திமாபுரத்தில் சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள், சுஜித்தின் பெற்றோரை சந்தித்தும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

அவர்களுக்கும், தங்களது மகன் உயிருடன் மீண்டு வர பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கும் சுஜித்தின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் கூறுகையில், சுஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக கடந்த 5 நாட்களாக பலரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதே போல சுஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என உலகம் முழுவதும் பிரார்த்தனை செய்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதனிடையே சுஜித் மரணம் தொடர்பாக வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன்பீவி மணப்பாறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜின் வயலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தண்ணீர் வராததால் அதன் மீது சாக்குகளை வைத்தும், மண்ணை போட்டும் வைத்திருந்தனர்.

இந்த இடத்தில் ஏற்பட்டிருந்த குழியில் சிக்கி பிரிட்டோ ஆரோக்கிய ராஜின் மகன் சுஜித் இறந்திருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் 174(சந்தேக மரணம்) பிரிவின் கீழ் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News