செய்திகள்
புலியருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டுவதை படத்தில் காணலாம்.

பாபநாசம்-சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

Published On 2019-10-30 05:49 GMT   |   Update On 2019-10-30 05:49 GMT
பாபநாசம் அணைப் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டியதால் அணைக்கு வினாடிக்கு 6,053 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்துள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று முதல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய பல இடங்களில் கனமழைபெய்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 141 மில்லிமீட்டர் மழை கொட்டியது. மணிமுத்தாறு, சேர்வலாறு, சேரன்மகாதேவி, மூலக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.

நெல்லை, பாளை பகுதியில் நேற்று முதல் இன்று வரை விடிய விடிய மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதுபோல நெல்லை, தச்சநல்லூர், பால பாக்கியநகர், பேட்டை, பாளை மனகாவலம்பிள்ளை நகர், அண்ணாநகர், மேலப்பாளையம், மேலகுல வணிகர் புரம் ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. அந்த இடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று தண்ணீரை வடியவைத்து வருகிறார்கள்.

பாபநாசம் அணைப் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டியதால் அணைக்கு வினாடிக்கு 6,053 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்துள்ளது. நேற்று 113 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரேநாளில் 7 அடி உயர்ந்து இன்று காலை 120.20 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 126.05 அடியாக இருந்தது. அங்கு ஒரே நாளில் அது 9 அடி உயர்ந்து இன்று காலை 135.17 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,843 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று 50 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரேநாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை 54 அடியாக உள்ளது.

இதுபோல மற்ற அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குண்டாறு அணை கடந்த ஒரு மாதமாக நிரம்பி வழிகிறது. ராமநதி, கருப்பாநதி அணைகள் மீண்டும் நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

பலத்த மழையால் பாளையில் நேற்று இரவு பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பாளை திருமால் நகர் பகுதியில் ஒரு மின்கம்பம் சரிந்து கீழே விழுந்தது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தினார்கள். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் மின்கம்பம் கீழே விழுந்ததால், அந்தப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது.

பாபநாசம் மற்றும் கடனா, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகளில் இருந்து விவசாயத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கால்வாரி குளங்கள், மானாவாரி குளங்கள் என 2,500-க்கும் மேல் உள்ளது. இதில் தற்போது 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. மற்ற குளங்களுக்கு தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. விரைவில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி விடும் என்று கூறப்படுகிறது.


Tags:    

Similar News