செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணை நீர்மட்டம் 8-வது நாளாக 120 அடியாக நீடிப்பு

Published On 2019-10-30 05:41 GMT   |   Update On 2019-10-30 05:41 GMT
மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணை நீர்மட்டம் கடந்த 8 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் காவிரியில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 25ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 27ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது.

அணை முழுமையாக நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே காவிரி டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை 16 கண் பாலம் மதகு வழியாக வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீரும், நீர்மின் நிலையம் வழியாக 22ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு இன்று காலை 25ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை கடந்த 23-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

அதன்பிறகு தொடர்ச்சியாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணை நீர்மட்டம் கடந்த 8 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.
Tags:    

Similar News